ரத்துசெய்யப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ மெயின் தேர்வுகள் எப்போது நடைபெறும்?
தேர்வு மைய ஒதுக்கீடு பிரச்சினையால் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ரத்துசெய்யப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ மெயின் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மையங்களில் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற இருந்தது. சென்னையில் தேர்வு மைய ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை நடத்த முடியாததால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. அதன்படி, புதிய தேர்வுதேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“நேற்று முன்தினம் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப்-2 (ம) 2A பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான தாள்-1- தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் கீழ்க்கண்டவாறு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1. 15.03.2026 மு.ப. (ஞாயிறு) - தொகுதி-2 A தாள்-2 (OMR) பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு
2. 15.03.2026 பி.ப. (ஞாயிறு) - தொகுதி-2 (ம) 2A தாள்-1 (விரிந்துரைக்கும் வகை) தமிழ் மொழி தகுதித் தேர்வு
மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.02.2026-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
எதிர்வரும் 22.02.2026 மு.ப. அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2க்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment