ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 16, 2026

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

 ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை  சரிபார்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களையும் மொத்தமாக ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் போலி சான்றிதழ்கள் மூலம் சிலர் பணியில் சேர்ந்துள்ளதாக எழுந்த புகார்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் அனைத்து வகை கல்விச் சான்றுகளையும் உரிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத் தன்மை அறியப்படுதல் வேண்டும். இந்த உண்மைத் தன்மை அறிதல் என்பது பணியில் சேர்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.


ஏற்கெனவே பணிபுரிந்து வரும் இதர தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் பயின்று பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியப்பட்ட விவரத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை அறியப்பட்ட பின்னர் மீண்டும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கோ, பல்கலைக்கழகத்துக்கோ உண்மைத்தன்மை அறிய அனுப்பத் தேவையில்லை.


உண்மைத்தன்மை அறியப்பட்ட விவரம் அனைத்தும் உரிய கால நேரத்தில் பெறப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் 10 ஆண்டுகள் கழித்து தேர்வுநிலை அல்லது 20 ஆண்டுகள் கழித்து சிறப்பு நிலை அனுமதிக்கும்போதும், மேலும் ஓய்வு பெறும் காலம் வரை மேற்கண்டவாறு உண்மைத்தன்மை அறியப்படுவதற்காக அலைக்கழிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.


இந்த விவகாரத்தில் ஓய்வு பெறும் நாளில் கல்விச்சான்று உண்மைத்தன்மை அற்றது என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும், அதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதி மறுக்கப்படுவதும், ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைப்பதும் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு அந்த ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்று துறைக்கு எதிரான தீர்ப்புகளைப் பெறுகின்றனர்.


எனவே, இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கும் வகையில் நியமன அலுவலர்கள், ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்கள் இனி வருங்காலங்களில் புகார்களுக்கு இடமளிக்காத வகையில் உடனடியாக உரிய கால நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றினை உண்மைத் தன்மை அறியும் வகையில் உரிய அலுவலர், நியமனத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அற்றது, போலியானது என அறிக்கை பெறப்பட்டால் அந்தந்த ஆசிரியர்கள் மீது உடனடியாக காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், அதன் தொடர்ச்சியாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment