சுவையான கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி?
முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு இலை அதுவும் சாப்பிடும்போது அனைவரும் ஒதுக்கக்கூடிய ஒரு இலையை வைத்து எப்படி ஒரு சாதம் செய்வது என்று பார்ப்போம்.
கருவேப்பிலை நம்முடைய உணவில் தவிர்க்க முடியாத ஓர் இடத்தை வகிக்கிறது. கண்களின் ஆரோக்கியம், முடி வளர்ச்சி, இரத்த சோகையைத் தவிர்ப்பது என அதன் நன்மைகள் ஏராளம். ஆனால், உணவில் இருக்கும் கருவேப்பிலையை மட்டும் தனியாக ஒதுக்கி வைக்கும் பழக்கம் பல குழந்தைகளிடம் (மற்றும் சில பெரியவர்களிடமும்) இருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொடுக்கிறது இந்தச் சமையல் குறிப்பு உதவியாக இருக்கும்.
கருவேப்பிலையைத் தூக்கலாகச் சேர்த்து அதை ஒரு பொடியாக அரைத்து சாதத்துடன் கலப்பதன் மூலம், கருவேப்பிலையின் நன்மைகள் முழுவதுமாக நம்மை வந்தடையும். அதே சமயம், அதில் கருவேப்பிலை இருப்பது யாருக்கும் தெரியவே தெரியாது. இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால், லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற ஒரு சிறந்த ரெசிபி இது. இதனை எப்படி செய்வது என்று மாஸ்டர் செஃப் வாணி இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புதிதாகப் பறித்த கருவேப்பிலை
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
வேர்க்கடலை
சீரகம்
முழுமல்லி
காய்ந்த மிளகாய்
பூண்டு
புளி
பெருங்காயம்
கல் உப்பு
சமையல் எண்ணெய்
சாதம்
தேங்காய் எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரி
மஞ்சள் தூள்
உப்பு
செய்முறை
முதலில், 2 கப் கருவேப்பிலையைச் சட்டியில் எண்ணெய் இல்லாமல் (ட்ரை ரோஸ்ட்) வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்பு, தனியாக கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, சீரகம், முழுமல்லி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து, ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இடித்த பூண்டு, பெருங்காயம், கல்லுப்பு மற்றும் புளி சேர்த்து நன்றாகப் பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த கருவேப்பிலை மற்றும் வறுத்த அனைத்து மசாலா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, நைஸான பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு வெடித்ததும், கடலைப்பருப்பு, வேர்க்கடலை, உடைத்த முந்திரி, மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இப்போது, நாம் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை பொடி, தேவையான உப்பு, மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு, சமைத்து ஆற வைத்த சாதத்தை உள்ளே சேர்த்து, பொடி எல்லா இடத்திலும் சேரும்படி மெதுவாகக் கிளறவும். இந்தச் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் பரிமாறத் தயார்.

No comments:
Post a Comment