சித்ரா பௌர்ணமி 2026: சிறப்பு,நேரம், வழிபாடு மற்றும் பலன்கள்
தை, கார்த்திகை மாத பௌர்ணமிகளை போன்று சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியும் மிகவும் சிறப்புக்குரியதாகும். சித்ரா பௌர்ணமி நாளில் தான் மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இது தெய்வீக ஆசீர்வாதத்தை பெறுவதற்கும், பாவங்களில் இருந்து விடுபடுவதற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக சித்ரா பௌர்ணமி கருதப்படுகிறது. மாதந்தோறும் பவுர்ணமி திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பௌர்ணமி நாளில் மட்டும் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். அப்படி சித்திரை மாதத்தில் வரும் இந்த பெளர்ணமி நாளுக்கு என்ன சிறப்பு, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சித்ரா பௌர்ணமி சிறப்புகள் :
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் நாளையே நாம் சித்ரா பௌர்ணமியாக கொண்டாடுகிறோம். இது நம்முடைய பாவ, புண்ணிய செயல்களை கணக்கு வைத்திருப்பவரும், கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட வழியை ஏற்படுத்தி தருபவருமான சித்திரகுப்தரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று செய்யப்படும் வழிபாடுகளால் இறையருள் கிடைப்பதுடன், கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு, நல்ல மாற்றத்தை பெறுவதற்கான நாளாகவும் சொல்லப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி வழிபாடு ஏன் முக்கியம் ?
நாம் வாழும் காலத்தில் செய்யும் நன்மைகள், தீமைகளை பதிவு செய்து வைத்திருப்பவர் சித்திரகுப்தர் தான் என சொல்லப்படுகிறது. நாம் இறந்த பிறகு, நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை சித்திரகுப்தர் தான் தீர்மானிக்கிறார். நாம் மரணத்திற்கு பிறகு நரகத்தில் துன்பங்களை அனுபவிக்கக் கூடாது, கடந்த காலங்களில் செய்த தவறுகள் அல்லது பாவங்களுக்கு பிராயசித்தம் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் தங்களின் தவறுகளுக்காக வருந்தி, சித்ரகுப்தரை மனதார வேண்டி, சில வழிபாடுகளை செய்வதால் அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி 2026
சித்ரா பௌர்ணமி 2026 தேதி:மே 01 வெள்ளி
பௌர்ணமி துவங்கும் நேரம்: ஏப்ரல் 30 இரவு 09.51
பௌர்ணமி நிறைவடையும் நேரம்:மே 01 இரவு 11.07
சித்திரை நட்சத்திரம் துவங்கும் நேரம்: ஏப்ரல் 30 அதிகாலை 01.11
சித்திரை நட்சத்திரம் முடியும் நேரம்:மே 01 அதிகாலை 02.41
சித்ரா பௌர்ணமியில் செய்ய வேண்டியவை :
1. புனித நீராடல் - ஒருவர் தன்னுடைய உடலையும் மனதையும் தூய்மைபடுத்திக் கொள்ளவும், தெய்வீக அருளை பெறவும் புனித நீராடல் மிகவும் அவசியமானதாகும்.
2. சிவ வழிபாடு - இந்த நாளில் சித்திரகுப்தரையும், சிவபெருமானையும் வழிபடுவதால் மனதில் அமைதியும், இறையருளும் கிடைக்கும். இதனால் கர்மவினைகள் குறையும்.
3. விரதம் - சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து, இறைவனை வழிபட்டு, மாலை நேரத்தில் சந்திரனையும் வழிபட்டு தங்களின் விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.
4. தானங்கள் - ஏழைகளுக்கு உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதால் நம்முடைய கர்மவினைகளை பெருமளவில் குறைக்கும்.
5. திருவண்ணாமலை கிரிவலம் - இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவது பாவங்களை போக்கி, மிகப் பெரிய புண்ணியத்தை பெற்றுத் தரும். இதனால் சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

No comments:
Post a Comment