பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால், அவர்களுக்கு அளிக்கப்படும் பேறுகால விடுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு
பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றால், அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான பேறு காலத்துக்கு மட்டும் தலா ஓராண்டு (365 நாட்களுக்கு மிகாமல்) முழு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. முதல் பிரசவத்தில் 2 இரட்டை குழந்தைகள் பெற்றாலும், 2-வது பிரசவத்துக்கும் ஓராண்டு விடுப்பு அளிக்கப்படுகிறது. 3-வது குழந்தை பெறும்போது, அவர்களுக்கு பேறுகால விடுப்பு அளிப்பதில்லை.
இந்த நிலையில், 3-வது குழந்தை பெறவும் பேறுகால விடுப்பு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அரசு ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் கடந்த ஜன.21-ம் தேதி பிறப்பித்த உத்தரவு விவரம்:
உச்ச நீதிமன்றம் கடந்த 2025 மே 23-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ''விடுப்பு வழங்குவதற்கான குழந்தைகள் பெறும் உச்ச வரம்பை நிர்ணயிக்க கூடாது. 3-வது குழந்தைக்கு வேண்டுமானால், தேசிய அளவில் 26 வாரங்கள் பேறுகால விடுப்பு என்பதை 12 வாரமாக குறைக்கலாம். பிரசவ தேதிக்கு 6 வாரம் முன்பாக விடுப்பு அளிக்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இதன் அடிப்படையில் தமிழக அரசு, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து, மார்ச் 13-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 'பெண் அரசு ஊழியர்கள் முதல் 2 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலத்தில் பேறுகால விடுப்பு முழு ஊதியத்துடன் தலா ஓராண்டும், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அந்த பேறுகாலத்துக்கு முழு ஊதியத்துடன் 12 வாரம் பேறுகால விடுப்பும் அளிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment