அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி முதல் தொடக்கம் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 19, 2026

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி முதல் தொடக்கம்

 அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி முதல் தொடக்கம்


பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் ஜூலை 23-ம் தேதி தொடங்கி, அக்.28-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளன.


1, 2-ம் வகுப்பு, 3 முதல் 5-ம் வகுப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு, 9, 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு என 5 பிரிவுகளாக வயதுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணற்சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை,பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீ போர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.


முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரையும், குறுவட்ட அளவிலான போட்டிகள் ஆக.19 முதல் 21-ம் தேதி வரையும் நடைபெறும். அதைத் தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் ஆக.11 முதல் செப்.9-ம் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.8 முதல் 15-ம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் அக்.7 முதல் 28-ம் தேதி வரையும் நடத்தப்படும்.


மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment