தலைமுடியில் ஏற்படும் எந்தெந்த பிரச்சினைக்கு ஆளி விதை நல்லது? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, April 8, 2026

தலைமுடியில் ஏற்படும் எந்தெந்த பிரச்சினைக்கு ஆளி விதை நல்லது? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

 தலைமுடியில் ஏற்படும் எந்தெந்த பிரச்சினைக்கு ஆளி விதை நல்லது? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


ஆளி விதை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு சூப்பர் ஃபுட். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது மிக அவசியம். 


அந்த வகையில் ஆளி விதை மிக முக்கியமானதொரு சூப்பர் ஃபுட் இந்த ஆளி விதையை சாப்பிட மட்டுமல்ல தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கும் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.


 தலைமுடியில் ஏற்படும் எந்தெந்த பிரச்சினைக்கு ஆளி விதை நல்லது? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.


ஆளி விதை அதிக அளவிலான நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை உணவாகவும் தலைமுடிக்கும் சருமத்துக்கும் என எல்லா வகைகளிலும் இந்த ஆளி விதையைப் பயன்படுத்த முடியும். ஆளி விதையை வறுத்து, ஜெல்லாக மாற்றி, எண்ணெய் வடிவில் என பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.


ஆளிவிதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


ஆளிவிதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன.


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,

வைட்டமின் ஈ

வைட்டமின் பி,

ஆன்டி ஆக்சிடண்ட்டுகள்

நிறைந்திருக்கின்றன.


​முடி வளர்ச்சிக்கு ஆளி விதை


முடி வளர்ச்சிக்கு ஆளி விதை மிக உதவியாக இருக்கும். இது வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தையும் போதிய நீர்ச்சத்தையும் கொடுத்து உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.


உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். சிலருக்கு முடி நீளமாக இருக்கும். அதுபோன்று உள்ளவர்களுக்கு தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமென்றால் அதற்கு ஆளி விதையைப் பயன்படுத்தலாம்.


ஆளி விதையின் ஜெல் மற்றும் எண்ணெயை தொடர்ச்சியாக தலைமுடிக்குப் பயன்படுத்தி வரும்போது தலைமுடி அடர்த்தியாக வளரும்.


பயன்படுத்தும் முறை


ஆளி விதையின் ஜெல்லை தலைமுடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து நன்கு 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பிறகு வழக்கம் போல மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசலாம்.


வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை அடைய முடியும்.


​பொடுகை விரட்ட ஆளி விதை


பொடுகுடன் இருக்கும் வேர்க்கால்களையும் அதனால் ஏற்படும் தலைமுடி பிரச்சினையையும் சமாளிப்பது மிக மிகக் கடினமான ஒன்று தான். இந்த பொடுகுத் தொல்லையைச் சரிசெய்ய ஆளி விதை உதவியாக இருக்கும்.


ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். குறிப்பாக உச்சந்தலைக்குப் போதிய ஈரப்பதத்தைக் கொடுத்து பொடுகு போன்றவற்றை வராமல் தடுக்கவும் விரட்டவும் உதவி செய்யும்.


ஆளி விதையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது.


பயன்படுத்தும் முறை


ஆளி விதை ஜெல்லை தலையில் தேய்த்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலச பொடுகு குறைய ஆரம்பிக்கும்.


​முடி உதிர்வை குறைக்கும் ஆளி விதை


அதிகப்படியான ரசாயன பயன்பாடு, தலைமுடி வறட்சி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளால் தலைமுடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கிறது.


இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறைப்பதற்கு ஆளி விதை மிக உதவியாக இருக்கிறது.


ஆளி விதையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி உதிர்வைக் குறைத்து அதன் வளர்ச்சியைத் தூண்டுகிறது.


குறிப்பாக முடி உடைதலைக் குறைத்து தலைமுடியை மென்மையாக மாற்றுகிறது.


பயன்படுத்தும் முறை


தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் ஆளிவிதை ஜெல்லை தலையில் அப்ளை செய்யுங்கள். ஆனால் இந்த ஜெல்லை பயன்படுத்தும் முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்திருப்பது நல்லது. அது முடியை அதிக வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும். அதனால் முதல் நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லது.


​வீட்டிலேயே ஆளி விதை ஜெல் தயாரிப்பது எப்படி?


தேவையான பொருள்கள்


ஆளி விதை - கால் கப்


தண்ணீர் - இரண்டரை கப்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அதில் ஆளி விதையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.


அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்க கொதிக்க ஆளி விதையிலிருந்து ஜெல் வெளிவரும்.


ஜெல் நன்றாக மாறும்போது அடுப்பை அணைத்து விடுங்கள். ஜெல்லை சூடாக இருக்கும்போதே வடிகட்டியில் வடித்து விடுங்கள். ஆறிவிட்டால் ஜெல் மிகவும் கெட்டியாகிவிடும்.


பிறகு வடிகட்ட முடியாமல் போகும். அதனால் கொஞ்சம் ஜெல் கெட்டியாகாமல் திரவத் தன்மையோடு இருக்கும்போதே வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.


வடிகட்டிய ஜெல்லை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஆறவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


இதை ப்ரிட்ஜில் வைத்து 3 வாரங்கள் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment