சரஸ்வதி பூஜை 2025:வீட்டில் பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட உகந்த நேரம் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 30, 2025

சரஸ்வதி பூஜை 2025:வீட்டில் பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட உகந்த நேரம்

 சரஸ்வதி பூஜை 2025:வீட்டில் பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட உகந்த நேரம்


அம்பிகையைக் கொண்டாடும் நாள்கள் நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. நவம் என்றால் புதுமை. எனவே புதுமையான முறையில் அம்பிகையை வழிபட்டு அருள்பெற உகந்த நாள்கள் நவராத்திரி. முதல் மூன்று நாள்கள் அம்பிகையை துர்கையாகவும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியாகவும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையைக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக நவராத்திரியின் 9 ம் நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம்.


சரஸ்வதி தேவி கல்வி, கலை மற்றும் ஞானத்தின் அதிபதியாகத் திகழ்பவள். வாக்தேவி மூன்று காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களைக் கொள்கிறாள் என்கின்றன புராணங்கள். ஞான சரஸ்வதியை சிவபெருமானிடமிருந்து வெளிப்படும் ஞானப் பெண் என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அதனால்தான் அவள் சிவபெருமானைப் போலவே ஜடாமகுடம் தரித்து அதில் பிறைச் சந்திரனைச் சூடியுள்ளாள். ஶ்ரீதத்துவநிதி நூலானது `சரஸ்வதி, சந்திரனைச் சூடி அமுதக் கலசத்தை ஏந்தியிருக்கிறாள்’ என்று கூறுகிறது. பிரம்மனின் தேவியாகப் போற்றப்படும் சரஸ்வதி பிரம்மனின் நாவில் குடிகொண்டிருக்கிறாள் என்றும் சொல்லப்படுகிறது.


வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக `இடா’ என்றும், அறிவின் விளக்கமாக `பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன. பாரதி மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் என்கின்றன ஞான நூல்கள்.


சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?


நவராத்திரியில் நவமி திதியில் முறைப்படி சரஸ்வதிதேவியை வழிபட்டால், அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்கின்றன ஞான நூல்கள்.


இந்தப் புண்ணிய தினத்தில் அன்னை சரஸ்வதியை விரிவான முறையில் பூஜை செய்யும் முறைகள் உண்டு. முறைப்படி பூஜை அறையில், கலசம் வைத்து, அதில் அன்னையை எழுந்தருளச் செய்து, வேத விற்பன்னர்களின் வழிகாட்டலுடன் பூஜை செய்யும் வழக்கம் உண்டு.


சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து கோலங்கள் இட்டு அலங்கரிக்க வேண்டும். 


பூஜை அறையில் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அடுக்கி மேடை அமைக்க வேண்டும். புத்தகங்களை அடுக்கி அதன் மீது வெண்பட்டு அல்லது வெள்ளை ஆடை ஏதேனும் ஒன்றை விரித்து அலங்கரிப்பார்கள்.


மேடையில் மையமாக சரஸ்வதிதேவி படம் அல்லது பிம்பத்தை (விக்ரகத்தை) வைத்து பூஜைக்குத் தயாராக வேண்டும்.


அன்னை சரஸ்வதி தேவியின் படம் அல்லது பிம்பத்துக்குச் சந்தனக் குங்குமத் திலகமிட்டு, பூக்கள் சூட்டி அலங்கரிக்கலாம். அருகிலேயே பூஜைக்கான கலசம் வைத்து அதில் ஏலக்காய் முதலான வாசனைத் திரவியங்களைப் போட்டு (தங்க ஆபரணங்கள் முத்துக்கள் போன்றவற்றைப் போடுவதும் உண்டு), கலசத்தில் வாயில் மாவிலை தேங்காய் வைத்து வணங்கி, பூஜையைத் தொடங்க வேண்டும்.


புத்தகத்தை வைக்கும் முன் சிறிது நேரம் படித்துவிட்டு வைத்துவிட வேண்டும். அதேபோன்று அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், லேப்டாப், செக் புக், கணக்குப் புத்தகங்களையும் வைக்கலாம்.


முதலில் `முழுமுதற் தெய்வமாம் விநாயகரைத் தொழுது, நாம் மேற்கொள்ளப் போகும் சரஸ்வதிதேவிக்கான பூஜை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவேற அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.


பின்னர் சரஸ்வதிதேவியை மனத்தில் தியானித்து, `தாயே என் பூஜையை ஏற்று, அறியாமால் ஏதேனும் பிழை நேர்ந்தால் பொறுத்து, பூரண அருளை வழங்க வேண்டும்’ என்று மனதார வேண்டிச் சங்கல்பித்துக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்க வேண்டும்.


குமரகுருபரர் அருளிய சகலகலா வல்லிமாலை முதலான துதிப்பாடல்களைக் குடும்பத்துடன் சேர்ந்து பாடுவது விசேஷம்.


பின்னர் தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.


இதில் முக்கியம் பிறருக்கு தானம் வழங்குவது. ஏழைகளுக்கு பிரசாதங்களை வழங்கி அவர்கள் உண்டபின்னர், நாமும் பிரசாதம் ஏற்கலாம். சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கும் நாம், மறுநாள் விஜயதசமி தினத்தில் உரிய நேரத்தில், சரஸ்வதிதேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்கவேண்டும்.


2025 நவராத்திரி ஒன்பதாம் நாள் - சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை


அஷ்டமி நவமி ஆகிய திதிகள் வழிபாட்டுக்கானது என்று சொல்லப்படுவதில் சரஸ்வதி தேவிக்கு உகந்த திதிகளில் பஞ்சமிக்கு அடுத்தபடியாக நவமியும் உள்ளது.


 இதில் புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை நவமி மகாநவமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மகாநவமி அன்றுதான், சரஸ்வதி பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. 


திதிகளின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை மதியமே மகாநவமி திதி துவங்கினாலுமே, புதன்கிழமை அக்டோபர் 1 2025 அன்று சரஸ்வதி பூஜை வருகிறது.


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - பூஜைக்கான முகூர்த்த நேரம்


அக்டோபர் 1 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:33 வரை நவமி திதி இருக்கிறது.


காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை எமகண்டம் மற்றும் நண்பகல் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை ராகுகாலம் இருப்பதால், ஒன்பது மணியிலிருந்து 12 மணிக்குள் பூஜை செய்யலாம்.



சரஸ்வதி பூஜை முகூர்த்த நேரம்:


 காலை 9:15 முதல் 10:15 வரை


சரஸ்வதி பூஜை முகூர்த்த நேரம்


 கௌரி நல்ல நேரம்:


 காலை 10:45 முதல் 11:45 வரை



நண்பகல் 12 மணிக்குள் பூஜை செய்ய முடியாதவர்கள் ராகு காலம் முடிந்து ஒன்றரை மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment