மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 29, 2025

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு..!

 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு..!


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ. 1000 பெறுவதற்கு கூடுதல் விதிவிலக்குகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதனால் கூடுதல் பெண்கள் பயன் பெறுவார்கள்.


நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுவரை நான்கு சக்கர வாகனம் இருந்தால் தகுதி மறுக்கப்பட்டது. இப்போது இந்தத் தடையை அகற்றி, அவர்களுக்கும் ரூ.1000 தொகை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் திருத்தப்பட்ட விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் திட்டத்தில் சேர தவறிய தகுதியான பெண்கள் மீண்டும் வாய்ப்பு பெறுவார்கள்.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத் தண்டுவடம்/ தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து. முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறணணிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.


மாநிலம் முழுவதும் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் பெண்கள் பயனடைய ஏதுவாக ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் மேலும் சில விதிவிலக்குகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


இயக்குநர் (சமூக) பாதுகாப்புத் திட்டம்) மேலும் தனது கடிதத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாகக் கீழ்க்காணும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள். இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம். ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளி உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment