வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்?அசைவ உணவுகள் உடலுக்கு நல்லவையா? எப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 7, 2024

வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்?அசைவ உணவுகள் உடலுக்கு நல்லவையா? எப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது?

 வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்?அசைவ உணவுகள் உடலுக்கு நல்லவையா? எப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது?


உணவிலிருந்து தொடங்குகிறது, நமக்கான ஆரோக்கிய வாழ்வு! 


அசைவ உணவுகள் நல்லவையா?


"அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது.


இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளைக் கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது.


எப்படிச் சமைக்கலாம்?


மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது.


சிக்கன், மட்டன், மீன் போன்ற பெரும்பாலான அசைவ உணவுகளையும் வெளிநாட்டினர் 'க்ரில்டு' (Grilled) எனும் எண்ணெய் சேர்க்காத குக்கிங் முறையில் தயாரிக்கின்றனர். இதன்மூலம், இறைச்சியானது, அதிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து மூலமாகவே வேக வைக்கப்படுவதால், அந்த உணவிலுள்ள சத்துகள் நமக்குச் சரியாகக் கிடைக்கின்றன. இதுபோன்று க்ரில்டு உணவாகச் சாப்பிடலாம். அல்லது, இறைச்சி உணவுகள் எதுவானாலும் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.


ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியில் கூடுதல் கவனம் தேவை!


அசைவ உணவுகளிலேயே சிக்கன் மற்றும் மீனில்தான் நல்ல கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதேபோல, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியும் உணவுக்கு ஏற்றவைதான். ஆனால், இந்த மூன்று உணவுகளிலும் இதய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள சாச்சுரேட்டடு கொழுப்பு (Saturated fat) அதிகம் உள்ளது. எனவே, இந்த மூன்று உணவுகளையும் எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஆட்டுக்காலில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால், ஆட்டிறைச்சியைவிடவும் அதன் கால் பகுதி நன்மை தரக்கூடியது.


வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்?


ஞாயிற்றுக்கிழமை என்பது பெரும்பாலான வீடுகளில் 'மீட் டே'வாக (Meat Day) மாறிவிடுகிறது. குறிப்பாக, அன்றைய தினம் பலரும் 2 - 3 வேளைக்கு அசைவம் சாப்பிடுவதுண்டு. இதுவும் தவறான பழக்கம்தான். ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், காலை அல்லது மதியத்தில் மட்டும் அசைவம் சாப்பிடலாம். இரவில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வாரத்துக்கு தலா 100 கிராம் வீதம் 1 - 3 தடவை மட்டும் அசைவம் சாப்பிடுவதே சரியானது. 'ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் விடுமுறை. அசைவம் வாங்குவதற்கும், அதைச் சமைப்பதற்கும் அந்த ஒருநாளில்தான் போதிய நேரம் கிடைக்கிறது' என்று சொல்லலாம். எல்லாவற்றையும்விட உடல் ஆரோக்கியம் மேலானது என்பதால், உணவு விஷயத்தில் உடலை வருத்தக் கூடாது.


அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை ஒரே நாளில் பலமுறை உட்கொள்வது மிகவும் தவறு. நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு ஒவ்வொரு நாளும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் தவிர, காய்கறிகள், தானியங்கள் சேர்த்த உணவுகள் சமைக்கப்படுவதில்லை. ஒருநேர உணவில் அசைவம், மற்ற இரண்டு வேளைகளில் காய்கறிகள், தானியங்கள் என நம் உணவுமுறை இருக்க வேண்டும்.


இவ்வாறு வாரத்தில் 1 - 3 நாள்களுக்கு அசைவ உணவுகளை தலா ஒரு வேளைக்குச் சாப்பிட்டால் தவறில்லை. விருந்து நிகழ்ச்சிகளில் பலவிதமான அசைவ உணவுகள் பரிமாறப்படுவதுண்டு. எப்போதாவது இவ்வாறு சாப்பிடலாமே தவிர, அதிக அளவு மற்றும் அதிக எண்ணிக்கையிலான அசைவ உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவதும் நல்லதல்ல. அசைவ உணவுகள் சாப்பிட்ட பின்னர், போதிய உடலுழைப்பு இருக்க வேண்டும். மாறாக, ஓரிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு டிவி பார்ப்பது, அரட்டையடிப்பது, செல்போனில் கேம் விளையாடுவது, தூங்குவது என இருக்கக் கூடாது.


ஜிம் போகிறவர்களுக்கு இறைச்சி உணவுகள் அதிகம் தேவையா?


ஜிம் போகிறவர்கள் உட்பட புரோட்டீன் அதிகம் தேவைப்படுபவர்கள் தினமும் அசைவம் சாப்பிடுகின்றனர். 100 கிராம் சிக்கனில் 25 - 27 கிராம் புரோட்டீன் இருக்கிறது. அதற்காக அசைவத்தை அடிக்கடி சாப்பிடக் கூடாது. ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள், வாரத்துக்கு தலா 150 கிராம் வீதம் 1 - 3 தடவை அசைவம் சாப்பிடலாம். புரோட்டீன் பலவிதமான உணவுகளில் கிடைக்கிறது. அந்தகைய உணவுகளைச் சுழற்சி முறையில் உட்கொள்வதே சிறந்தது.


நீங்கள் பிரியாணி பிரியரா?


பிரியாணி சாப்பிடுவது பெருமிதமானதாகவும் சந்தோஷமான தருணமாகவும் பலருக்கும் மாறிவிட்டது. பிரியாணியில் அளவுக்கு அதிகமாக எண்ணெய், உப்பு, மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. மாலை முதல் நள்ளிரவு வரை பிரியாணி விற்பனை கனஜோராக நடப்பது, நம் உடலுக்கு நாமே வேட்டு வைத்துக் கொள்வதற்கான கண்கூடான சான்று. கடைகளில் விற்கப்படும் பிரியாணியில் இறைச்சி குறைவாகவும், சாதம் அதிகமாகவும் இருக்கிறது. அந்த உணவில் சுவை தவிர, சத்துகள் அதிகம் இருப்பதில்லை. கூடவே, எண்ணெயில் பொரிக்கப்பட்ட இணை உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்வா, குளிர்பானம் என கடைகளில் வாங்கும் பிரியாணி உணவானது, உடலையும் உணவையும் கெடுதலாக்குகிறது.


இவ்வாறு தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்னைகள், உடல் பருமன், இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகள் வரக்கூடும். வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்தில் ஓரிரு முறை எண்ணெய் அதிகம் சேர்க்காமல் வீட்டிலேயே பிரியாணி செய்து அளவோடு சாப்பிடலாம். தப்பில்லை. அதுவும், காலை மற்றும் மதியத்தில் சாப்பிடலாம். இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிட வேண்டாம்.


அசைவ உணவுகளைச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா?


இறைச்சி உணவுகளைத் திரும்பத் திரும்பச் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, புளி அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட மீன் குழம்பை பலரும் நாள் கணக்கில் வைத்திருந்து, திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது தவறு. அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே மீன் குழம்பைச் சூடுபடுத்திச் சாப்பிடலாம். மீனில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மீன் உணவை அதிக தடவை சூடுபடுத்தும்போது, உடலுக்குக் கெடுதலான கொழுப்பு அமிலங்களாக (Trans fatty acids) மாறும்.


கடைகளில் அடிக்கடி சாப்பிடுகிறீர்களா?


இறைச்சி உணவுகள், சீக்கிரமே கெட்டுப்போகும் தன்மையுடையவை. முறையாகச் சுத்தம் செய்யாமல் சமைக்கும்பட்சத்தில், அதில் நோய்த் தொற்றுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, இறைச்சியை வேக வைக்காமல் அப்படியே சாப்பிடக் கூடாது. உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகள் பலவற்றிலும் இறைச்சி உணவுகள் சுகாதாரத்துடன் தயாரிக்கப்படுவதில்லை. ஃப்ரிட்ஜில் வைத்து பலநாள்களுக்கு அசைவ உணவுகளைப் பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். சுவைக்காக, அதிகளவிலான எண்ணெய் மற்றும் ரசாயனங்களையும் சேர்க்கின்றனர். எனவே, கூடுமானவரை அசைவ உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது ஆரோக்கியமானது.


வயதானவர்கள் இறைச்சி உணவுகள் சாப்பிடலாமா?


உடலுழைப்பு குறையும்போது, நாம் செலவிடுகிற ஆற்றலுக்கு ஏற்ப உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அது, இறைச்சி உணவுகளுக்கும் பொருந்தும். '80 வயதிலும் நன்றாக வேலை செய்கிறேன். உடலுழைப்புடன், செரிமான பாதிப்புகளும் இல்லை' என்பவர்கள், அசைவ உணவுகளை வாரத்தில் ஓரிரு முறை (குறைவான அளவில்) சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவாக இல்லாமல், குழம்பு மற்றும் சூப் செய்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment