சுவையான உளுந்து வடை(மெதுவடை) எளிமையான முறையில் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 22, 2023

சுவையான உளுந்து வடை(மெதுவடை) எளிமையான முறையில் செய்வது எப்படி?

 சுவையான உளுந்து வடை(மெதுவடை) எளிமையான முறையில் செய்வது எப்படி?


உளுந்து வடை என்பது அருமையான சிற்றுண்டி ஆகும். இது சிறுவயது குழந்தைகளும் கொடுப்பதற்கு ஏற்றது.


வழிபாட்டின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்துகளின் போதும் இதனை செய்வது நம்முடைய பராம்பரிய வழக்கம்.


தெருவோரக் கடைகளிலும், உணவங்களிலும் எளிதில் கிடைக்கும் இது நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய உணவாகவும் விளங்குகிறது.


இனி சுவையான உளுந்து வடை எளிமையான முறையில் செய்வது பற்றிப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்


உளுந்தம் பருப்பு – 250 கிராம்


சின்ன வெங்காயம் – 50 கிராம்


பச்சை மிளகாய் – 6 எண்ணம் (மீடியம் சைஸ்)


கறிவேப்பிலை – 3 கீற்று


உப்பு – தேவையான அளவு


மல்லி இலை – 3 கொத்து


சமையல் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு


உளுந்து வடை செய்முறை


உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


பின்னர் அலசி கிரைண்டரில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் ஆட்டவும்.


மாவினை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொண்டே அரைக்கவும்.


மாவில் சிறிதளவினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். இதுவே மாவினை வெளியே எடுக்க தேவையான பதம் ஆகும்.


மாவினைத் தோண்டுவதற்கு முன்பு சிறிதளவு உப்பினைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி மாவினைத் தோண்டவும்.


சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.


பச்சை மிளகாயினை காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.


கறிவேப்பிலையை உருவி அலசி ஒன்றிரண்டாகக் கிள்ளிக் கொள்ளவும்.


மல்லி இலையை சுத்தம் செய்து அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.


ஆட்டிய உளுந்த மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து ஒருசேர கலக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காய விடவும்.


சிறிதளவு மாவினை எடுத்து வாழை இலையில் வைத்து நடுவில் துளையிட்டு எண்ணெயில் போடவும்.


ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிடவும்.


எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.


சுவையான உளுந்து வடை தயார்.


குறிப்பு


உளுந்து வடையை தட்டும்போது தண்ணீரில் கையை நனைத்து மாவினைத் தொட்டால் கைகளில் ஒட்டாது தட்ட எளிதாக இருக்கும்.


விருப்பமுள்ளவர்கள் இஞ்சி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்தும் வடை செய்யலாம்.


உளுந்தம் மாவு மிகவும் நெகிழ்வாக வடை தட்ட வரவில்லை எனில் அதனுடன் சிறிதளவு பச்சரிசி மாவினைச் சேர்த்து கலக்கி வடை தட்டலாம்.

No comments:

Post a Comment