நீண்ட நாள் வாழ என்ன செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 22, 2023

நீண்ட நாள் வாழ என்ன செய்ய வேண்டும்?

 நீண்ட நாள் வாழ என்ன செய்ய வேண்டும்?


உப்பின் அளவைக் குறைத்தால், நீண்ட நாள் வாழலாம்.


சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உப்பு கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்பதன வசதி இல்லாததால், உணவுப் பண்டங்கள் நீண்டகாலம் கெட்டுப் போகாமல் இருக்க உப்பை பயன்படுத்திவந்தனர். "சேலரி' என்ற ரோமானிய வார்த்தையிலிருந்து வந்ததுதான் "சால்ட்' என்கிற உப்பு. அந்தக் காலங்களில் உப்பையே சம்பளமாகக் கொடுத்ததாகவும் வரலாறு சொல்கிறது.


கோடைகாலத்தில் வேட்டையாடும் விலங்குகள், பிடிக்கப்படும் மீன்களை உப்புத் தண்ணீரில் போட்டு, கெடாமல் பாதுகாத்து குளிர்காலத்தில் பயன்படுத்துவார்கள். காலப்போக்கில் சர்க்கரையைப் போல உப்பும் சுவைக்காக உணவில் சேர்க்கப்பட்டுவிட்டது.


உடல் ஆரோக்கியத்தை உப்பு பாதிக்கும் என்பது எப்போது தெரியவந்தது?


உப்பு சாப்பிடாத பழங்குடியினர்களின் ரத்த அழுத்தம் 90/60 என்ற அளவில் இருந்தது. உப்பை மிக அதிகமாகப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினருக்கு சராசரி ரத்த அழுத்தம் 140/90 என்றாகிவிட்டது. உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. ரத்த அழுத்தப் பாதிப்பு காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு ரத்த அழுத்தம் சரியான இருந்தாலும், அதிக உப்பு பயன்பாட்டின் காரணமாக, மேற்கண்ட நோய்கள் ஏற்படக் கூடும்.


உப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை என்ன?


உலகில் முக்கியமான 55 நாடுகள் உணவில் உப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவசியமானால், உப்புப் பயன்பாட்டைக் குறைக்கச் சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


உடலில் உப்பின் அளவு எவ்வாறெல்லாமம் அதிகரிக்கிறது?


காய்கறிகளில் இயற்கையாகவே உப்பு இருக்கிறது. சமையலிலும் உப்பு சேர்க்கிறோம். நூடுல்ஸ், பிஸ்கட், கேக் வகைகளில் உப்பைச் சேர்த்தே தயாரிக்கின்றனர். பலவற்றில் அந்த உப்புச் சுவை வெளிப்படையாகத் தெரியாது. இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துகொண்டால், ஒருவர் தினம் சராசரியாக எட்டு முதல் பத்து கிராம் வரை உப்பை உள்கொள்கிறார். ஊறுகாய், அப்பளம், வடாம், நூடுல்ஸ், நொறுக்குத் தீனி கார வகைகளில் உப்பு தாராளமாகச் சேர்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவு இதனை உறுதிப்படுத்துகின்றன.


ஐந்து கிராமுக்குக் குறைவாக உப்பு தினமும் சாப்பிடலாம் என்றே உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.


உப்பு விஷயத்தில் எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்?


ஓரு வயது வரை குழந்தைகளுக்கு உப்பு தர வேண்டிய அவசியமில்லை. பன்னிரெண்டு வயது வரை ஊறுகாய் போன்றவை தர வேண்டாம்.


பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு உப்பு இல்லாமல்தான் உணவு கொடுப்பார்கள். அந்த நாட்டில் பிரெட்டில் ஆண்டுதோறும் படிப்படியாக உப்பின் பயன்பாட்டை 5 சதவீதம் அளவுக்கு குறைக்க உத்தரவிடப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளிலும் உப்பின் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது.


இதனால், பல நாடுகளில் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உப்பைக் குறைத்தால், உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.


இந்தியா போன்ற வெப்பநாடுகளில் அதிக வியர்வையால் உடலில் உப்பு இழப்பு ஏற்படுகிறது என்கிறார்களே?


வியர்வையால் உப்பு இழப்பு ஏற்படுவது உண்மைதான். அதற்காக அதிகம் உப்பு உள்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ரத்தத்தில் சோடியம் உப்பின் அளவு 140 மில்லி மோல்ஸ்/ லிட்டர் என்ற அளவில் இருக்கும். வியர்வையில் சோடியம் உப்பின்அளவு 5 முதல் 10 மில்லி மோல்ஸ்/லிட்டர் என்ற அளவில்தான் இருக்கும். எனவே, வியர்வையால் உப்பு இழப்பு என்பது மிகக் குறைவுதான். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக ஏற்படும்போது, தண்ணீர் அதிகமாகக் குடித்தாலே போதுமானது.

No comments:

Post a Comment