முடி உதிர்வதற்கான காரணங்களும் , இயற்கை தீர்வுகளும் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, December 24, 2025

முடி உதிர்வதற்கான காரணங்களும் , இயற்கை தீர்வுகளும்

 முடி உதிர்வதற்கான காரணங்களும் , இயற்கை தீர்வுகளும்


தலைமுடி உதிர்தல்.. இன்று பொதுவாக அனைவருக்குமே இருக்கும் ஒரு பிரச்னை. தலைமுடி உதிர்வதைத் தடுக்க என்ன செய்வது? என தெரிந்துகொள்வதைவிட அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்வதுதான் முதலில் அவசியம்.


காரணங்களைத் தவிர்ப்பதன் மூலமாக இந்த பிரச்னையில் ஓரளவு தீர்வு காண முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.


காரணங்கள் என்னென்ன?


முடி உதிர்தலுக்கு முதல் காரணம் மரபியலாக இருக்கலாம். அதாவது குடும்பத்தில் யாருக்கேனும் இளம் வயதிலேயே முடி உதிர்தல் இருந்திருக்கலாம்.


ஆண், பெண் இரு பாலருக்குமே ஹார்மோன் மாற்றங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கும் என்கின்றனர். பெண்களுக்கு பிசிஓஎஸ், கருப்பை நீர்க்கட்டிகள், நீரிழிவு, மாதவிடாய், மெனோபாஸ், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்தால் முடி உதிர்தல் இருக்கலாம். ஆண்களுக்கும் ஹார்மோன் மாற்றங்களால் முடி உதிர்தல் பிரச்னை இருக்கும்.


தலையில் அழுக்கு சேர்வதால் ஏற்படும் பொடுகினாலும் முடி உதிர்தல் இருக்கும்.


உடல் ரீதியான பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினால் தலைமுடி கொட்டலாம்.


மன அழுத்தமும் முடி உதிர்தலுக்குக் காரணம். ஒட்டுமொத்தமாக உடல்ரீதியான பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு காரணமாக மாறி வருவது கவனிக்கத்தக்கது.


வயது முதிர்வினாலும் சிலருக்கு முடி உதிர்தல் ஏற்படலாம்.


ஊட்டச்சத்து குறைபாடு முடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். உடலில் போதுமான அளவு புரதம் இல்லையெனில் உதிரும் முடிகளுக்கு பதிலாக, புதிய முடி வளராது. அதனால் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு முக்கியம்.


தலைமுடியை வெப்பமடைய வைக்கும் ஹேர் டிரையர், ஸ்ட்ரைட்னர் போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்னையைச் சந்திக்கலாம்.


உடல்ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ சோர்வாக உணர்ந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.


ரசாயனம் அதிகம் நிறைந்த ஷாம்பூ உள்ளிட்ட தலைமுடி சார்ந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவது முடி உதிர்தல் பிரச்னையை ஏற்படுத்தும்.


சில இயற்கையான தீர்வுகள்


முட்டையின் வெள்ளைக்கரு திரவத்தை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.


கற்றாழைச் சாறையும் தொடர்ந்து தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்படும். முடி பளபளப்பாக இருக்கும்.


முடி உதிர்வைக் கட்டுப்படுத்த தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். இரவில் எண்ணெய் வைத்துவிட்டு காலையில்கூட குளிக்கலாம். அவ்வப்போது எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது அவசியம்.


காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளில் செல்லும்போது தலைமுடியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.


வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம்.


முடி கருமையாக இருக்கவும் முடி உதிராமல் இருக்கும் விளக்கெண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


குளிர்காலத்தில் தலைமுடியை அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகும்.


இதுதவிர நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


குளித்தவுடன் தலைமுடியை நன்றாக காயவைத்த பின்னர் சீப்பு பயன்படுத்த வேண்டும்.


தலைமுடி அதிகமாக இருந்தால் அவ்வப்போது கட் செய்துவிடுவது முடி ஆரோக்கியமாக வளர உதவும்.

No comments:

Post a Comment