விநாயகர் பாடல்கள்: ஐந்து கரத்தனை மற்றும் பாலும் தெளி தேனும் பாடலும் விளக்கமும்
ஐந்து கரத்தனை- பாடல்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பாலும் தெளிதேனும் பாடல்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!
விளக்கம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை…..
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
(இதன் பொருள்) ஐந்து கைகளையும், யானை முகத்தையும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகின்றேன்.
இந்து – சந்திரன்.
எயிறு – தந்தம்.
நந்தி-சிவபெருமான்.
புந்தி – மனம்.
விளக்கம்
நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் விநாயகன் பெற்றிருத்தலின், ஐந்து கரத்தன் எனப்பட்டான். தந்தம் வளைந்து இருப்பதால் பிறைச்சந்திரன் போன்ற தந்தம் எனப்பட்டது. பிறைச்சந்திரன் வடிவம் வளைவுடையது. விநாயகர் என்பார் பிரணவ வடிவினர் ஆவர்.
எயிறு என்பது பல், கொம்பு மற்றும் தந்தம் என்று பொருள்படும்.
தந்தம் என்ற வடமொழிச் சொல்லின் மறுவலே *Dental* என்ற ஆங்கிலச் சொல்.
ஆனால் இங்கே குழந்தைகளுக்கு பொருள் சொல்லும் போது *சந்திரனின் பிறை போன்ற பற்களைக்* கொண்டவர் என்று நேரடி பொருள் கொள்ளாமல் அல்லது சொல்லாமல் *சந்திரனின் பிறை போன்ற தந்தங்களைக் கொண்டவர் என்றோ அல்லது சந்திரனின் பிறை போன்ற கொம்புகளைக் கொண்டவர்* என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
எயிறு என்பதற்கு பல் என்று நேரடி பொருள் கொள்வதும் தவறில்லை.
விநாயகர் - பாலும் தெளிதேனும்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!
பொருள்:
பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான் நைவேத்தியமாக படைக்கிறேன்.
கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !

No comments:
Post a Comment