ஆடிப்பூரம் 2025: தேதி, வழிபாட்டு நேரம்,வழிபாட்டு முறை, சிறப்புகள் மற்றும் கிடைக்கும் பலன்கள்..!
ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரக் கூடிய மிக முக்கியமான விழாவாகும். இந்த நாளில் அம்பாளுக்கு வளையல் அணிவித்து, வளைகாப்பு திருவிழா நடத்துவது வழக்கம். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் படைத்து வழிபடுவார்கள்.
நல்ல வரன் அமையாமல் திருமணம் தாமதமாகிறது. எத்தனையோ சிகிச்சை, வழிபாடு செய்யும் குழந்தை வரத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்பவர்கள் ஆடிப்பூரம் அன்று வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஆடிப்பூரம் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் நாள் என்பதால் நம்முடைய வாழ்விலும் மங்கல காரியங்கள் நடக்க அம்மன் அருள் செய்வாள் என்பது நம்பிக்கை.
ஆடிப்பூரம் சிறப்புகள் :
ஆடி மாதம், ஆன்மிக விழாக்களுக்கான மாதமாகும். இதில் எத்தனையோ முக்கியமான விழாக்கள் வந்தாலும் அவற்றில் சைவ, வைணவ பாகுபாடு இன்றி அனைத்து ஆலயங்களில் விழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா, ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது. உலகிற்கே தாயாக விளங்கும் அன்னை பராசக்தி அவதரித்த நாளாகவும், அன்னைக்கு வளைகாப்பு நடத்தும் நாளாகவும், மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுவது இந்த ஆடிப்பூர திருநாளாகும்.
27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரமாக வருவது பூரம் நட்சத்திரம். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரம் ஆகும். கிரகங்களில், செல்வ செழிப்பு, சுக போகமான வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் கிரகமான சுக்கிரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரம் இதுவாகும். இது பெருமாளுக்கு விருப்பமான நட்சத்திரங்களில் ஒன்று என்று கூட சொல்லலாம். பூரம் நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் பெருமாளின் அருளும் கிடைக்கும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று அம்பிகையை வழிபட்டால் கேட்ட வரங்கள் நிச்சயம் கிடைக்கும்.
ஆடிப்பூரம் 2025 தேதி, நேரம் :
ஆடிப்பூரம் இந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. ஜூலை 27ம் தேதி மாலை 06.55 மணிக்கு துவங்கி, ஜூலை 28ம் தேதி இரவு 8 மணி வரை பூரம் நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் நாக சதுர்த்தியும் கூட. இந்த நாளில் விநாயகரையும், நாக தேவதைகளையும் வழிபடுவது இன்னும் சிறப்பானதாகும். ஆடிப்பூரம் திங்கட்கிழமையில் வருவதால் அன்று காலை 07.30 முதல் 9 வரை ராகு காலமும், காலை 10.30 முதல் பகல் 12 வரை எமகண்ட நேரமும் உள்ளது. அதனால் இந்த நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் வழிபாடு செய்வது சிறப்பு.
ஆடிப்பூரம் வழிபாட்டு நேரம் :
காலை - 6 முதல் 07.20 வரை
09.10 முதல் 10.20 வரை
ஆடிப்பூரம் வழிபாட்டு முறை :
ஆடிப்பூரம் அன்று பூஜை அறையில் ஒரு மனைப்பலகை எடுத்து அதன் மீது கோலமிட்டு, சிவப்பு நிற துணி விரித்து, அம்மன் படம் அல்லது விக்ரஹம் இருந்தால் எடுத்து வைக்க வேண்டும். அம்பாளே வீட்டில் எழுந்தருளி இருப்பதாக நினைத்து சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து, அழகான மலர்களால் அலங்கரித்து, வளையல்களை மாலையாக கட்டி போடலாம். ஏதாவது ஒரு இனிப்பு நைவேத்தியமாக படைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, பன்னீர் தெளிவித்து, அட்சதை அரிசி தூவி நழுங்கு வைப்பது போல் அம்மனுக்கு நழுங்கு வைக்க வேண்டும். பிறகு அம்மனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். பிறகு தீப, தூப ஆராதனை காட்டி, எங்கிருந்து எடுத்தோமோ, மீண்டும் அங்கேயே அம்பாளின் படம் அல்லது விக்ரஹத்தை வைத்து விடலாம்.
திருமணம், குழந்தை வரத்திற்கான வழிபாடு :
திருமணம், குழந்தை வரம் வேண்டும் என்பவர்கள் யாருக்கு குழந்தை பிறக்க வேண்டும் அந்த பெண்ணை அம்மனின் படம் வைத்து பூஜை செய்த மனையில் அமர வைத்து, அவர்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் நழுங்கு வைத்து, வளையல் அணிவிக்க வேண்டும். பிறகு, பூஜை அறைக்கு சென்று, அம்மனிடம் விரைவில் வளைகாப்பு வளையல் அணிந்து கொள்ளும் பாக்கியத்தை தரும் படி வேண்டிக் கொள்ள வேண்டும். அதே போல் திருமணம் நடக்க வேண்டும் என்பவர்களுக்கு நழுங்கு வைத்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் விரைவில் குழந்தை வரமும், திருமண வரமும் கிடைக்கும். திருமணம், குழந்தை அனைத்தும் உள்ளது என்பவர்கள் வழிபாட்டிற்கான நேரத்தில் இதே போல் அம்மனுக்கு நழுங்கு வைத்து வழிபடலாம். கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது கோவிலுக்கு வருபவர்களுக்கு நம்முடைய கையால் வளையல் வாங்கிக் கொடுக்கலாம்..
குழந்தை வரம் தரும் திருப்புகழ் :
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்கள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
திருமண நடைபெற திருப்புகழ் :
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வென்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்டு
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே

No comments:
Post a Comment